அக்டோபர் 26ஆம் தேதி கேரம்டவுன்ஸ் உயர்கல்லூரியின் நாடகக்கலையரங்கத்தில் வள்ளுவர் அறக்கட்டளை நடத்திய இரண்டாவது தமிழ் இலக்கிய விழா வெகு சிறப்பாக நடந்தது. 

மங்கல விளக்கேற்றி தமிழ்த்தாயை வணங்கியும், தமிழின் புகழையும் பாடி விழா துவங்கியது.

ஏராளமன தமிழறிஞர்களும், பெற்றோர்களும், சமூக ஆர்வலர்களும் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர். தமிழகத்தில் இருந்து வந்து விழாவில் சிறப்பு விருந்தினர்களாக திரு தமிழருவி மணியன் அவர்களும், பேராசிரியர் பர்வீன் சுல்தானா அவர்களும் கலந்துகொண்டார்கள்.

 

திரு பொன்னரசு அவர்களும், செல்வி புவனேஸ்வரி சுகுமாரன் அவர்களும் விழாவைத் தொகுத்தளித்தார்கள். வள்ளுவர் அறக்கட்டளையின் தலைவரும், நிறுவனருமான நாகை. கா. சுகுமாரன் வரவேற்புரை நிகழ்த்தினார்.

“புலம்பெயர்ந்த தமிழர்களும் வள்ளுவமும்” என்னும் தலைப்பில் தமிழருவி மணியன் அவர்களும், “வளைந்த செங்கோலும், வளையாத வில்லும்” என்ற தலைப்பில் பர்வீன் சுல்தானா அவர்களும்

இனிமையான சிறப்புரையாற்றினர்.

வள்ளுவர் அறக்கட்டளை வழிநடத்தும் ஆஸ்திரேலிய தமிழ் கலாசாலையின் மாணவ மாணவிகள் ‘தமிழ் வளர்த்த’ அறிஞர்களாகத்தோன்றி ஏழு சிறப்பான நாடகங்களை வழங்கினார்கள்.

அண்டம் வெடித்து உலகம் தோன்றியபோதே தமிழும் தோன்றியது என்பதை விளக்கும் வகையில், திக்குகள் எட்டும் சிதறி என்ற பாரதியின் பாடலுக்கான அழகிய நடனத்துடன் நாடகங்கள் துவங்கின.

தமிழின் தோற்றம், அவ்வையும் சிறுவனும், மாணிக்கபரல்(சிலம்பு), சமய குறவர்கள், ராஜராஜ சோழன், ஒலைச்சுவடியும் ஓயாத தமிழ் அறிஞர்களும், மறக்க முடியாத மாணிக்கங்கள் ஆகிய தலைப்புக்களின் நாடக காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தது அனைவரையும் கவர்ந்தது.

தமிழின் தோற்றத்தையும் அதன் வளர்ச்சிக்கு வித்திட்ட அறிஞர்களையும் நினைவுகூறும் விதமாக அமைந்த நாடகத்தில், அறிஞர்களின் வாழ்வில் இடம்பெற்ற பல சுவையான நிகழ்ச்சிகளை விளக்கும் காட்சிகள் இடம்பெற்றன.

திருக்குறளின் பெருமைகளை உணர்த்தும் வகையில் ‘அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே’ என்ற பாடலுக்கு மாணவிகள் ஆடிய நடனம், விழாவிற்கு சிறப்பு சேர்ப்பதாக அமைந்தது.

ஆஸ்திரேலிய தமிழ்க் கலாசாலை வடிவமைத்த மரபுசார் தமிழ்க் கல்வித் திட்டத்தின் முதல் தமிழ்ப் புத்தகத்தை சிறப்பு விருந்தினரான திரு தமிழருவி மணியன் அவர்கள் வெளியிட்டார். பண்பாட்டைக் கற்றுதருகின்ற கல்வியே சிறந்தது என்று கூறி, திருக்குறள், புறநானூறு, சிலப்பதிகாரம் போன்ற வாழ்வை செம்மைப்படுத்தும் நூல்களைக் கற்பது அவசியம் என்று வலியுறுத்தினார்.

நெறிதவறி வாழாமல், சரியான இலக்குடன் வாழ்ந்தால்தான் நம் குழந்தைகளின் எதிர்காலம் சிறக்கும் என்பதை பேராசிரியர் பர்வீன் சுல்தானா சிறப்பாக எடுத்துக்கூறினார்.

வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய மூன்று நாட்களிலும் கலாசாலையின் தமிழ்வகுப்புகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

நன்றியுரையுடன் விழா இனிதே நிறைவு பெற்றது.

 

Photo gallery:

 

Tags: , , , , , , , ,