கடந்த 19ஆம் திகதி மாலை 4.30 மணிக்கு விளையாட்டரங்கத்தைவிட்டு வெளியே வந்த பெற்றோர்கள், குழந்தைகள் அத்தனை பேர் முகத்தில் புன்னகையையும், கரங்களில் பரிசுகளையும் காண முடிந்தது. சுமார் 5.30 மணிநேரமும் ஓடி விளையாடி மகிழ்ந்த குழந்தைகள், பெற்றோர்களிடம் களைப்பைக் காண முடியவில்லை. எல்லோர் நெஞ்சத்திலும் நிறைவைத்தந்த அந்த விழா ‘தைத்திங்கள் திருநாள் தமிழரின் ஆனந்தத் திருநாள் பொங்கல்விழா !’

024

2014 ஆம் ஆண்டின் பொங்கல் விழாவைக் கடந்த 19 ஆம் திகதி கிரண்போர்ன் கேசி விளையாட்டரங்கத்தில் வெகு கோலாகலமா கொண்டாடப்பட்டது. 

வள்ளுவர் அறக்கட்டளை ஏற்பாடு செய்திருந்த இந்தப் பொங்கல் விழாவில் ஆஸ்திரேலியத் தமிழ்க்கலாசாலையின் மாணவர்களும், பெற்றோர்களும் மற்றும் நூற்றுக்கணக்கான பொதுமக்களும் இணைந்து அரங்கத்தில் பொங்கல்வைத்துக் கொண்டாடினர். தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா துவங்கியது. நமது பாரம்பரிய முறைப்படி மத்தள இசைப்பின்னணியில் இஞ்சியும் மஞ்சளும் கட்டிய புதுப்பானைகளைப் பெண்கள் ஏந்தி வந்தனர்.

கரும்புகளின் அடியில், மாக்கோலமிட்டு, விளக்கேற்றிக் கதிரவன் ஒளிப்படக் குலவை ஒலியெழுப்பி அடுப்பில் வைத்தார்கள். பானைகளில் நீரையும் பாலையும் ஊற்றி, அடுப்பில் தீயை மூட்டி, கதிரவனை வணங்கி அரிசியையும், வெல்லத்தையும் இட்டார்கள். 

கதிரவன் ஒளியில் கழனியில் கதிரடிக்கும் விவசாயிகளின் பெருமைகளை விளக்கியும், நாட்டுப்பற்றையும், தமிழ் மொழி மற்றும் பண்பாட்டின் சிறப்பை விளக்கியும் பாடல்கள் இசைக்கப்பட்டன. பொங்கிவரும் பொங்கலைக் கண்டு குழந்தைகள் அனைவரும் பொங்கலோ பொங்கல் என்று மகிழ்ச்சியுடன் குரலெழுப்பியது கண்கொள்ளாக்காட்சி.

புலம்பெயர்ந்து வாழும் மக்களின் குழந்தைகளுக்கு நமது பாரம்பரிய வழக்கங்களை விளக்கிக் காட்டும் முகமாக இந்தப் பொங்கல் விழா அமைந்திருந்தது. 

வண்ணம் தீட்டும் போட்டியில் ஏராளமான குழந்தைகள் கலந்துகொண்டு தங்கள் திறமையைக் காட்டினார்கள். கோடுகள் எல்லாம் குழந்தைகள் விரல்களால் வண்ணம் பெற்று உயிரோட்டம் கொண்ட படங்களாக மாறியது கண்களுக்கும் மனதுக்கும் இதமாக இருந்தது. பசு, காளை, புலி, குதிரைவீரன் வேடமணிந்தும், கும்மியடித்து ஆடியும் பாடியும், கோலம் வரைந்தும், கயிறு இழுத்தும், ஓடியாடியும் குழந்தைகள் விளையாடி மகிழ்ந்தார்கள். ஒவ்வொரு குழந்தையும், பெற்றோரும் உறிப்பானையை அடித்து மகிழ்ந்தார்கள். 

கோலம் வரைவதில் நாங்களும் வல்லவர்கள்தான் என்று கூறி அம்மாக்களுக்குப் போட்டியாகக் குழந்தைகளும் கோலம் போட்டார்கள். கயிறு இழுக்கும் போட்டியில் ஆண்களுக்குத் தாங்கள் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபிக்கும் வண்ணம் பெண்களும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்கள். குழந்தைகள் ஆடிய அத்தனை விளையாட்டுகளையும் தாங்களும் ஆடி பாடி மகிழ்ந்த பெற்றோர்களும் குழந்தைகளாகிப்போனார்கள் என்றால் மிகையாகாது.

வள்ளுவர் அறக்கட்டளையின் நிறுவனரும், ஆஸ்திரேலியத் தமிழ்க் கலாசாலையின் காப்பாளருமான நாகை சுகுமாரன் தலைமையேற்க, சங்கர சுப்பிரமணியன், அரவேந்தன் ஆகியோர் போட்டியில் வென்ற குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் பரிசுகளை வழங்கினார்கள். அலங்கை சீனிவாசன், சாதி பாட்சா ஆகியோர் விழாவைத் தொகுத்து வழங்கினார்கள், கலாசாலையின் விளையாட்டுத்துறை பொறுப்பாளர் மன்னார்சாமி அவர்களும், சண்முக சுந்தரம் அவர்களும், பெற்றோர்களும் விளையாட்டுகளை ஒருங்கிணைத்து நடத்தினார்கள். 

அறக்கட்டளையின் செயலாளர் Dr புவனேஸ்வரி சுகுமாரன், பொறுப்பாளர்கள் சசி கிரிதரன், சாந்தி சிவகுமார், கற்பகவல்லி சுரேஷ், கார்த்திகேயன் சுகுமாரன் மற்றும் ஆஸ்திரேலியத் தமிழ்க் கலாசாலையின் ஆசிரியர்கள் ஆகியோர் விழாவை வழிநடத்தினார்கள்.

பொங்கலுடன் பாரம்பரிய உணவுகளும் வழங்கப்பட்டன.

பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் வந்திருந்து தாயகத்தின் நினைவில் வாழும் எல்லாமக்களுக்கும் என்றோ ஒருநாள் நடக்கின்ற இதுபோன்ற சில விழாக்கள்தான் நம் பண்பாட்டின் சிறப்பைக் குழந்தைகளுக்கு விளக்கிக் காட்டுகின்றன. அத்தனை பெற்றோர்களும் இந்த விழாவை தன் இல்லத்தின் விழாவாக நினைத்து அனைத்து நிகழ்ச்சியிலும் கலந்து மகிழ்ந்தார்கள். 

விழாவில் குழந்தைகளும் பெற்றோர்களும் காட்டிய ஈடுபாடு ஒன்றை நமக்கு நினைவு படுத்துகிறது. இப்படிப்பட்ட பெற்றோர்களும், குழந்தைகளும் இருக்கும் வரை தாய்மொழிக்கும், தமிழ்ப் பண்பாட்டிற்கும் என்றும் அழிவில்லை !

 

ஆஸ்திரேலியத் தமிழ்க் கலாசாலை

வள்ளுவர் அறக்கட்டளை

 

 

 

Tags: , , , , , , , ,