அன்புடையீர் !
சிலப்பதிகாரம் இலக்கியத் திருவிழா பற்றிய அறிவித்தல்.

கடந்த டிசம்பர் மாதம் 13 ஆம் தேதி மாலை நேரம் மெல்பேர்ன் மாநகரில் கேரம்டவுன்ஸ் உயர் கல்லூரியில் சிலப்பதிகாரம் என்றதோர் இலக்கிய விழா நடைபெற்றது.

 

4.30 மணி துவக்கம் இரவு சுமார் 9.30 மணிவரை நடைபெற்ற இந்த இலக்கிய விழாவில் முத்தமிழையும் சிறப்பிக்கும் வகையில் சிந்தனைச் சொற்பொழிவும், கவியரங்கமும், நாட்டியமும், நாடகமும் நடைபெற்றன. தமிழரின் தலைசிறந்த இலக்கியமாகிய சிலப்பதிகாரத்தை முன்வைத்து “சிலப்பதிகாரம் இலக்கியத் திருவிழா” என்ற பெயரில் நடைபெற்ற இவ்விழாவைப் பெருந்திரளானோர் கண்டு மகிழ்ந்தனர்.

 

ஆஸ்திரேலியாவின் அகில உலகத் தமிழ் ஆய்வு சபையின் ஆதரவுடன் வள்ளுவர் அறக்கட்டளை நடத்திய இவ்விழாவிற்கு இந்தியாவில் இருந்து வருகை தந்திருந்த திரு தமிழருவி மணியன் அவர்கள் “இலக்கியக் காலம் தொட்டு இன்றுவரை பெண்மை” என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவாற்றினார். சங்ககாலம் முதல் இன்றுவரை இலக்கியத்திலும், நடைமுறை வாழ்கையிலும் சமுதாயத்தால் பெண்கள் எப்படிப் பார்க்கப்படுகிறார்கள் என்பது மட்டுமல்லாமல் தற்காலத்தில் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதையும் திரு தமிழருவி மணியன் அவர்கள் தெளிவாகப் படம்பிடித்துக் காட்டினார். பெண்மையைப் போற்றவேண்டும், பெண்ணுரிமையைக் காக்கவேண்டும், கற்பு நெறியைக் காக்க வேண்டும் அதேசமயம் கற்பு என்ற பெயரில் பெண்ணடிமைத்தனம் கூடாது என்று வலியுருத்திப் பேசிய திரு தமிழருவி மணியன் ஐயா காட்டிய சங்க இலக்கிய மேற்கோள்கள் சுவையானதாகவும், சிந்தைக்கு விருந்தாகவும் அமைந்தன.

 

இலக்கியத்தில் உள்ள பெண்ணியம் குறித்த கருத்துகளை அவர் மேலோட்டமாகச் சொல்லாமல் அதன் உள்நோக்கத்தைத் தெளிவுபடுத்திய விதம் ஒரு ஆய்வுக் கட்டுரையைப் போல் இருந்தது.

 

இந்த இலக்கியத் திருவிழாவில் மெல்பேர்னின் தலைசிறந்த நடனப் பள்ளி மாணவர்களும், ஆஸ்திரேலியத் தமிழ்க் கலாசாலையின் மாணவர்களும், பெற்றோர்களும் இணைந்து ‘கண்ணகியின் கனல், சீதையின் சினம், பாஞ்சாலியின் மனம்’ என்ற நாடகத்தை நடத்தினர். பட்டம் ஏற்ற இளவரசனின் கோபத்துக்கு ஆளாகிய இளைஞனைத் தண்டிக்க முனைந்த மன்னரின் முன் கண்ணகி தோன்றி உலக ஆண் சமுதாயத்தை எச்சரித்தாள். திகிலடைந்த மன்னனுக்குப் பாஞ்சாலியின் மனதையும், சீதையின் சினத்தையும் படம் பிடித்துக் காட்டினாள். மேற்கண்ட நாடகத்தில் மன்னராகவும், மக்களாகவும், மந்திரி, சேனாதிபதி, வீரர்கள், மற்றும் புரட்சித் தமிழ்த் தலைவனாகவும் நடித்த ஆஸ்திரேலியத் தமிழ்க் கலாசாலை மாணவர்களின் ஆற்றல் பாராட்டுக்குரியதாக இருந்தது.

 

தமிழ் இலக்கிய உலகில் மூன்று மாதர்களுக்கு என்றும் முக்கியத்துவம் உண்டு. சீதை, பாஞ்சாலி, கண்ணகி ஆகிய இம்மூவரையும் சுற்றிப் பின்னப்பட்ட கதைகளில் பெண்மை எப்படியெல்லாம் சித்தரிக்கப்பட்டுள்ளது என்பது எல்லோருக்கும் தெரிந்திருந்தாலும், கண்ணகி, சீதை மற்றும் பாஞ்சாலியின் கண்ணோட்டத்தில் காட்சிகளை அமைத்து இந்தச் சமுதாயத்திற்குச் சில வினாக்களை எழுப்பும் முகமாக காட்சிகள் அமைந்திருந்தது இந்த நாடகத்தின் சிறப்பு.

 

மக்களின் அவச்சொல்லுக்கு அஞ்சிக் கர்ப்பிணிப் பெண் சீதையைக் கானகத்திற்கு அனுப்பிய இராமனுக்கு ஆதரவாகப் பேசிச் சீதையை அயோத்திக்கு மீண்டும் அழைத்தார் திரு. தினேஷ் சிவக்குமார்.  சீதை மூன்று தவறுகளை இழைத்ததால்தான் இன்னலுறுகிறார் என்று சீதையைக் குற்றம் சாட்டினார் திரு ஐயப்பதாசன். அதற்குப் பதிலளித்து சீதைக்கு ஆதரவாகப் பேசிய திருமதி பிரபாவதி பழனியும், திருமதி சுதாமதி வேணுகோபாலும் காட்சியை மெருகேற்றினார்கள். சீதையாக நடித்த திருமதி பர்வீன் பஷீத் தன் நடிப்பாலும், வசனத்தாலும் எல்லோரையும் கவர்ந்தார்.

 

கண்ணனுடைய தர்ம யுத்தமும் விவாதத்திற்கு வைக்கப்பட்டிருந்தன. இந்த நாடகத்தில் பாஞ்சாலியாக நடித்த திருமதி விஜயலட்சுமி செட்டியாரின் கோபத்துக்கும் குற்றச்சாட்டிற்கும், கண்ணனாக நடித்த திரு. பாலாஜி, தருமராகத் தோன்றிய திரு. தவீசன், பீமனாகத் திரு. ரவீந்திரன் ஆகியோர் பதிலளித்தனர். துரியோதனனாகத் திரு சண்முக சுந்தரமும், கர்ணனாகத் திரு சிவா துரைசாமி ஆகியோர் தோன்றிப் பாண்டவர்களைக் குற்றம் சாட்டினர். ஆஸ்திரேலியத் தமிழ்க் கலாசாலையின் மாணவர்களின் பெற்றோர்களே இராமாயண, மகாபாரதக் கதாபாத்திரங்களாகத் தோன்றி, தங்கள் வாதத்தை முன் வைத்து நடித்தது, மாணவர்களைத் தமிழ்பால் ஈடுபாடு கொள்ளவைக்கும் என்பதில் ஐயமில்லை.

 

இந்தச் சிலப்பதிகாரம் இலக்கியத் திருவிழாவில் தேடுகிறேன் என்ற தலைப்பில் ஒரு கவியரங்கம் நடைபெற்றது. பாடும்மீன், செந்தமிழ் செல்வர் திரு ஸ்ரீகந்தராசா அவர்கள் நடுவராக இருந்து கவியரங்கத்தை நடத்தினார். காதல் என்ற தலைப்பில் திரு ஜெயராம சர்மா, வீரம் என்ற தலைப்பில் திரு ஆவூரான் சந்திரன், நட்பு என்ற தலைப்பில் திரு அரவிந்த், தாய்மை என்ற தலைப்பில் செல்வி பிரியங்கா பொன்ராசா, இனப்பற்று என்ற தலைப்பில் செல்வி காயத்ரி சண்முகசுந்தரம், பொது நலம் என்ற தலைப்பில் திரு அஜந்தன், மனித நேயம் என்ற தலைப்பில் திரு கல்லோடைக்கரன் ஆகியோர் தங்கள் கவிதைகளை வாசித்தார்கள். கவிஞர்கள் எழுவரின் கவிதைகள் அனைத்தும் ஏழு சுரங்களாக இருந்தன. அவற்றைத் தொகுத்து அறிமுகப்படுத்திக் கவியரங்கத்தை நடத்திய திரு ஸ்ரீகந்தராசா அவர்கள் தான் பெற்ற பாடும்மீன், செந்தமிழ் செல்வர் என்ற பட்டங்களுக்குத் தகுதியானவர்தான் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார்.
சிந்தனைக்கு விருந்தாக ‘திருக்குறள்’ என்ற தலைப்பில் திரு சங்கர சுப்பிரமணியன் அவர்கள் உரையாற்றினார்.

 

புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் படைப்பாற்றல் வியக்கவைக்கிறது என்று சிறப்பு விருந்தினராக வந்திருந்த விக்டோரிய மாநில பல்லினப் பண்பாட்டுக்குழு ஆணையர் திரு சிதம்பரம் சீனிவாசன் அவர்கள் மொழிந்தார். பல்வேறுபட்ட இயக்கங்கள் ஒன்றுகூடி ஒரு இலக்கியத் திருவிழாவை நடத்தியது ‘தமிழுக்கு என்றும் அழிவில்லை என்பதை உணர்த்துகிறது என்று சென்னையிலிருந்து வருகை தந்திருந்த SRM பல்கலைக் கழகப் பேராசிரியர் முனைவர் திரு இல. சுந்தரம் அவர்கள்கூறினார்.

 

ஆஸ்திரேலியத் தமிழ்க்கலாசாலையின் ஆசிரியர்களும், வள்ளுவர் அறக்கட்டளையின் நிறுவனர் திரு சுகுமாரன் அவர்களும் விழாவைத் தொகுத்து வழங்கினார்கள். தமிழ்க்கல்வி சிறந்து ஓங்குவதற்கு ஆசிரியப் பயிற்சி பெற்ற ஆசிரியர்களே அவசியம் என்பதைத் திரு சுகுமாரன் வலியுறுத்தினார். மரபுசார் தமிழ்க் கல்வியை வலியுறுத்திப் பேசிய திரு சுகுமாரன் அவர்கள் எழுதிய தமிழ்ப் பாடப்புத்தகத்தைத் திரு தமிழருவி மணியன் ஐயா வெளியிடத் திரு சிதம்பரம் சீனிவாசன் அவர்கள் பெற்றுக்கொண்டார்கள். செல்வி புவனேஸ்வரி சுகுமாரன் அவர்களும் ஆஸ்திரேலிய தமிழ்க்கலாசாலையின் ஆசிரியர்களும் நன்றி கூற விழா இனிதே நிறைவுற்றது.

இதைப் பற்றிய மேலதிக விபரங்களைப் பெற 0434 013 993 என்ற இலக்கத்திலும் www.valluvarfoundation.org . www.learntamil.org என்ற இணையதளங்களிலும் தொடர்புகொள்ளலாம்.

 

Tags: , , , , , ,